Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 9, 2018

எம்.பிக்களுக்கு விசேட கொடுப்பனவு, வசதி வழங்குவது குறித்து ஆராய்வு



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு மறுக்கப்பட்டுள்ளபோதும் 'கம்பெரலிய' திட்டத்தை மேற்பார்வை செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை பெற்றுத்தருவது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க நேற்று தெரிவித்தார்.

'கம்பெரலிய' திட்டத்தை எவ்வாறு மேற்பார்வை செய்யலாமென்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவே இந்த யோசனையை சிபாரிசு செய்திருப்பதாகவும் அமைச்சர் கருணாதிலக்க கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதிதிட்டத்தை மேற்பார்வை செய்வதற்காக புதிதாக அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு சம்பளம் பெற்றுத் தருவதிலும் பார்க்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் வசதிகளை வழங்கி அதனை நடைமுறைப்படுத்துவதே சாதகமான வழியாகுமென மூவரடங்கிய குழு சிபாரிசு செய்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அது தொடர்பாகவே அமைச்சரவையில் ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

எவ்வாறானபோதும் அமைச்சரவை இவ்விடயம் தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லையென்றும் இது இன்னும் ஆராய்வு மட்டத்திலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோரிடமே இது தொடர்பில் ஆராய்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் மூவரும் இணைந்தே இக்குழுவின் உறுப்பினர்களை நியமித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் கருணாதிலக்க மேலும் தெரிவித்ததாவது-

நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும் அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. என்றபோதும் இது அநாவசியமானது என்றும் இந்த யோசனையை நிறைவேற்றப்போவதில்லையென்றும் ஜனாதிபதி, பிரதமர் ,நிதி அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் தெட்டத் தெளிவாக கூறிவிட்டனர். இது தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுமில்லை.

லக்ஷ்மி பரசுராமன்