Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 9, 2018

அண்ணாவின் அருகே நிரந்தர ஓய்வெடுத்தார் தம்பி கருணாநிதி


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் தனிப்பெரும் தலைவராகப் போற்றப்படுபவருமான கலைஞர் கருணாநிதியின் பூதவுடல் நேற்று மாலை இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அறிஞர் அண்ணா சமாதிக்கு வலதுபுறத்தில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் கலைஞரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கலைஞர் நேற்றுமுன்தினம் மாலை 6.10 மணியளவில் உயிரிழந்ததையடுத்து அன்னாரின் உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்வதற்கு தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சட்டப் பிரச்சினையை முன்வைத்து தமிழக அரசு அக்கோரிக்கையை நிராகரித்திருந்தது.

இதனை எதிர்த்து தி. மு. க. தரப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதையடுத்து, கலைஞரின் உடலை அண்ணா சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.

இத்தீர்ப்பையடுத்து தி.மு.க. ஆதரவாளர்களின் சீற்றம் தணிந்ததுடன், சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.

கருணாநிதியின் பூதவுடல் சென்னை ராஜாஜி அரங்கில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்களும், பிரதமர் நரேந்திரமோடி உட்பட மத்திய அரசு முக்கியஸ்தர்கள் பலரும் நேற்று நேரில் வருகை தந்து தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

கலைஞரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, கலைஞரின் குடும்பத்தாரிடம் தனது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“தன்னிகரற்ற தலைவரும், மூத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர் கருணாநிதி. அவர் கோடானு கோடி மக்களின் இதயத்தில் என்றென்றும் வாழ்வார்” என்று மோடி குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சோனியா காந்தி தனது இரங்கல் செய்தியை கடிதம் மூலம் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

கலைஞரின் நல்லடக்கத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் தூர இடங்களில் இருந்தெல்லாம் தொண்டர்கள் வந்து சேர்ந்ததால் ராஜாஜி மண்டபத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையான பிரதேசம் மக்கள் வெள்ளத்தினால் நிரம்பியிருந்தது.

நேற்றுப் பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான இறுதி ஊர்வலம் மாலை 6.15 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி பகுதிக்கு வந்து சேர்ந்தது.

இறுதி ஊர்வலம் வந்து கொண்டிருந்த பாதையெங்கும் தி. மு. க. ஆதரவாளர்களான ஆண்களும் பெண்களும் கதறியழுதபடி வந்ததைக் காண முடிந்தது. இதற்கு முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கியதால் இருவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இருவர் காயமடைந்தனர்.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வகைதொகையின்றி மக்கள் முண்டியடித்து வந்ததனால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையொன்று ராஜாஜி மண்டபம் அருகே ஏற்பட்டது. தொண்டர்கள் கூட்டத்தினரை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு ஸ்டாலின் உட்பட கலைஞரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

ராஜாஜி மண்டபத்தில் இருந்து பூரண அரசாங்க மரியாதைகளுடன், இராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் மெரினாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முப்படை வீரர்களின் மரியாதையுடன் இறுதி ஊர்வலம் சென்றது.

தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்றோரும் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

பேழையில் எழுதப்பட்ட வாசகம்:

கலைஞரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழையில் பின்வரும் வாசகம் எழுதப்பட்டிருந்தது.

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்.”

முப்பது வருடங்களுக்கு முன்னர் கலைஞர் தனது குடும்பத்தினரிடம் இவ்வாறான வாசகத்தை தனது பிரேதப் பெட்டி மீது பொறிக்குமாறு கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஒருபுறமிருக்க, இந்திய பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வானது கலைஞரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எம்.பியாகவோ அல்லது முன்னாள் எம்.பியாகவோ இல்லாத ஒருவருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

கலைஞரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நேற்று முதல் 7 தினங்கள் துக்கும் அனுஷ்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ராஜாஜி மண்டபத்தில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த போதிலும், மெரினா கடற்கரைக்கு பூதவுடல் கொண்டு வரப்பட்ட போதிலும் சமயக் கிரியைகள் இடம்பெறவில்லை. மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வாய்க்கரிசி போடும் சம்பிரதாயபூர்வ நிகழ்வும் இடம்பெற்றதையடுத்து பூதவுடல் தாங்கிய பேழை நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment